Monday 1 November 2010

என்னை மிரளவைத்த எந்திரன்-3 ஆஸ்கார் வென்ற ஹாலிவுட் இயக்குநர்!

உள்ளூரில் ஆளாளுக்கு “எந்திரன் என்னோட கதை” என்று கிளம்ப, மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்ற பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஆலிவர் ஸ்டோன், அந்தப் படத்தை மிகவும் பாராட்டியுள்ளார். “இந்தப் படம் ஒரு ஒரிஜினல் ஸ்கிரிப்ட், மிகவும் சுவாரஸ்யமானது, அனுபவித்து மகிழ்ந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் பார்வையாளர்களைக் கவர்ந்த, ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ள எந்திரன் திரைப்படம், அடுத்து சர்வதேச திரைப்பட விழாக்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளது. ஆண்டுதோறும் மும்பையில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா, இந்த ஆண்டு எட்டு தினங்கள் நடந்தது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 250 படங்கள் திரையிடப்பட்டன.


இந்த விழாவின் இறுதிநாளில் திரையிடப்பட்ட ஒரே Mainstream Cinema ரோபோ (எந்திரன்) தான். நிறைவு நாள் நிகழ்ச்சியில் உலகின் சிறந்த படைப்பாளிகள் பலர் பங்கேற்றனர். இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து பல இயக்குநர்கள், நடிகர்கள் இதில் கலந்து கொண்டு ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரனின் இந்தி வடிவமான ரோபோவைப் பார்த்தனர். சப் டைட்டில்களுடன் இந்தப் படம் திரையிடப்பட்டது.
ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர், தயாரிப்பாளரான ஆலிவர் ஸ்டோனும் பங்கேற்றார். சிறந்த திரைக்கதை மற்றும் இயக்கதத்துக்காக மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற ஆலிவர் ஸ்டோன், ரோபோவை ரசித்துப் பார்த்தார். விழாவின் முடிவில் ஆலிவர் ஸ்டோனுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
அவர் பேசுகையில் :
“இந்தியப் படங்கள், அவற்றில் காண்பிக்கப்படும் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த விழாவில் நான் பார்த்த படங்களில் என்னைக் கவர்ந்தது, ரோபோ-தான். மிகவும் அருமையாக, சுவாரஸ்யமாக எடுத்திருந்தனர். முற்றிலும் புதிதாக, ஒரிஜினலாக இருந்தது. நான் மிகவும் அனுபவித்து ரசித்தேன்…” என்றார்.

Saturday 30 October 2010

எந்திரன் படத்தின் கதை என்னுடையது...

 எந்திரன் படத்தின் கதை தன்னுடைய கதை என்று கூறி சமீபத்தில்  ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல எழுத்தாளர் போலீஸ் ஆணையரை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.சமீபத்தில் தான் எழுதியை கதையை எடுத்து அப்படியே திரைப்படமாக்கியுள்ளதாக எந்திரன் பட இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் கலாநிதிமாறன் மீது ஆரூர் தமிழ்நாடன் என்கிற அமுதா தமிழ்நாடன் போலீஸ் ஆணையர் ராஜேந்திரனை சந்தித்துப் புகார் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், மேலும் ஒரு தமிழ் எழுத்தாளர் எந்திரன் படக் கதை தொடர்பாக போலீஸ் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார். அவரது பெயர் ஆர்னிகா நாசர். தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். தினமலர் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் இவரது கதைகள் வெளியாகியுள்ளன. பல தொடர் கதைகளையும் இவர் எழுதியுள்ளார்.
இவர் நேற்று ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில் ஆர்னிகா நாசர் கூறியிருப்பதாவது:
நான், கடந்த 25 ஆண்டுகளாக சிறுகதைகள், விஞ்ஞான கதைகள் மற்றும் நாவல்கள் எழுதி வெளியிட்டு வருகிறேன். கடந்த 1995ம் ஆண்டு எழுதிய, ரோபாட் தொழிற்சாலை என்ற நாவல், குமுதம் குழுமத்தின் வெளியீடுகளில் ஒன்றான, மாலைமதி இதழில், ஜூலை 13, 1995 இதழில் வெளியானது.
சமீபத்தில் வெளிவந்த, எந்திரன் படத்தை பார்த்த என் வாசகர்கள் பலர், என் கதையில் இருந்து பெரும்பாலும் காப்பி அடிக்கப்பட்டு, அந்த படம் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். படத்தை நானும் பார்த்தேன்.
என் கதையில் வந்த பல சம்பவங்கள் படத்தில் முக்கியமான காட்சிகளாக படமாக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தேன். காப்புரிமை சட்டப்படி நான் முதல் உரிமையாளர். அப்படி இருக்கும்போது, இயக்குனர் ஷங்கர், இந்த கதையின் முக்கிய பகுதிகளை தன் சொந்த கற்பனையில் உருவான கதை என்று லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் திரித்து கூறி, பலரை ஏமாற்றி, ” எந்திரன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
காப்புரிமை சட்டப்படி, முதல் உரிமையாளரான என் அனுமதியில்லாமல், என் கதையை திரைப்படமாக்கி வெளியிட்டதன் மூலம், எனக்கு பல கோடி ரூபாய் சட்டவிரோத நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார். எனவே, என் கதையை திருடியவர்கள் மீது இந்திய காப்புரிமை சட்டப்படி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் நாசர்.
இந்தப் புகார் தொடர்பாக நாசர் கூறுகையில், எனது ரோபாட் தொழிற்சாலை கதையின் பிரதி, என்னிடம் இல்லாததால், சமீபத்தில், பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டேன். இதை அறிந்த கடலூர், சிப்காட் ஊழியர் துரை என்பவர், பிரதியை எனக்கு வழங்கினார்.
என் கதையை, இயக்குனர் ஷங்கர் படமாக எடுத்துள்ளது குறித்து கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன். அவர், உதவி கமிஷனர் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார். அத்துடன், 50 லட்ச ரூபாய் நஷ்டஈடு கேட்டு, சிவில் வழக்கும் தொடர உள்ளேன் என்று தெரிவித்தார்.
எந்திரன் கதை-ஆர்னிகா நாசர் கூறுவதென்ன?:
தனது ரோபோட் தொழிற்சாலைக் கதையில் உள்ள பல முக்கிய அம்சங்களை இயக்குநர் ஷங்கர் எடுத்தாண்டுள்ளதாக கூறியுள்ளார் ஆர்னிகா நாசர்.
அவர் கூறும் குற்றச்சாட்டுக்கள்
1.ஆர்னிகா நாசரின் கதையில் முக்கோணக் காதல். ஹீரோ, ஹீரோயின் மற்றும் ரோபோட். ஹீரோ ஒரு ரோபோட்டை உருவாக்குகிறான். அந்த ரோபோட், தனது காதலியை காதலிக்க ஆரம்பித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பின்னர் தனது ரோபோட்டுக்காக காதலியைத் தியாகம் செய்கிறான்.
- எந்திரனிலும் முக்கோணக் காதல் கதை. ஹீரோ உருவாக்கிய ரோபோட், ஹீரோவின் காதலைய வெறித்தனமாக காதலிக்கிறது. காதலியை அடைவதற்காக பல நாச வேலைகளில் கூட ஈடுபடுகிறது. இறுதியில் கோர்ட் உத்தரவின்படி அந்த ரோபோட் டிஸ்மான்ட்டில் செய்யப்பட்டு விடுகிறது.
2. ஆர்னிகா நாசர் கதையில், ரோபோட் இதய மாற்று அறுவைச் சிகிச்சையை செய்வதாக வைத்துள்ளார். ஆனால் எந்திரன் படத்தில் இது லேசாக மாற்றப்பட்டு பிரசவம் பார்ப்பது போல வைத்துள்ளார் ஷங்கர்.
3. வில்லனாக மாறும் ரோபோட் முதலில் இரண்டாகவும், பின்னர் பல நூறு பேராகவும் மாறுவது போல தனது கதையில் வைத்துள்ளார் ஆர்னிகா நாசர். இதுவும் எந்திரனில் அப்படியே வருகிறது.
4. ஆர்னிகா நாசரின் கதையில் வில்லனாக மாறும் ரோபோட்டை உடைத்து சிதறடித்து விடுகிறார்கள். ஆனால் அது மீண்டும் புது உருவம் பெற்று வருகிறது. எந்திரனிலும் இதேபோல உள்ளது.
5. சுயமாகவே சிந்தித்து தன்னைத் தானே வளர்த்துக் கொள்ளும் திறன் படைத்தாக ஆர்னிகா நாசரின் ரோபோட் உள்ளது. அதேபோலவே எந்திரன் ரோபோட்டும் புத்திசாலியாக காட்டப்பட்டுள்ளது.
6. எந்திரன் படத்தில் வரும் ரோபோட், விர்ச்சுவல் ரியாலிட்டி பிளேயரைப் பயன்படுத்துவதாக காட்சிகள் உள்ளன. இதே தொழில்நுட்பத்தை தனது கதையிலும் சொல்லியுள்ளார் நாசர்.
7. நூலகத்தில் உள்ள புத்தகங்களின் 36 லட்சம் பக்கங்களையும் ஒரு மணி நேரத்தில் தனது எலக்ட்ரானிக் மூளைக்குள் கிரகித்துக் கொள்கிறது ஷங்கரின் ரோபோட். அதேபோன்ற காட்சி ஆர்னிகா நாசரின் புத்தகத்திலும் உள்ளது.
8. காவல்துறை, சுகாதாரத் துறையில் ரோபோட்டைப் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் ஆர்னிகா நாசர் மற்றும் எந்திரன் படத்தில் உள்ளன.
9. ரோபோட்டுகளின் அரசன் போல எந்திரன் படத்தில் வரும் ரோபோட் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆர்னிகாவும் அதேபோல காட்டியுள்ளார்.
10. மனித குலத்தை அடிமையாக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக ஆர்னிகா நாசரின் ரோபோட்டும், எந்திரன் ரோபோட்டும் காட்டப்பட்டுள்ளன.
இந்த ஒற்றுமைகளை வைத்துத்தான் தனது கதையின் பல முக்கிய அம்சங்களை ஷங்கர் எடுத்துக் கையாண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் நாசர்.
Related Posts Plugin for WordPress, Blogger...